நண்பனை ஆள் வைத்து அடித்து பணம் கொள்ளை : கொள்ளையடித்துவிட்டு புகாரும் அளித்தது அம்பலம்
சென்னையில் தன்னுடைய நண்பனையே ஆள்வைத்து அடித்து பணத்தை கொள்ளையடித்த நபர், பாதிக்கப்பட்ட நண்பருடன் சேர்ந்து, காவல்நிலையத்திலும் சென்று புகார் அளித்துள்ளார்.
சென்னை திருவல்லி கேணி பகுதியில் உள்ள Rich street-ல் செல்போன் பழுதுபார்க்கும் கடை வைத்திருப்பவர் ஜாபர் சாதிக். திங்கட்கிழமை இரவு தண்டையார்பேட்டை காவல்நிலையத்திற்கு தனது நண்பர் தமீம் அன்சாரியுடன் வந்த அவர், புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தானும் தனது நண்பர் தமீம் அன்சாரியும் நந்தனம் தேவர் சிலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் தங்களை இரும்பு கம்பிகளால் தாக்கிவிட்டு, 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை கொள்ளையடித்து சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.
முதல்கட்ட விசாரணையில், ஜாபர் சாதிக், அவரின் நண்பர்கள் தமீம் அன்சாரி மற்றும் முகமது இத்ரீஸ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு சென்று பணத்தை மாற்றும் குருவியாக செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வெளிநாட்டு பணத்தை அதிக அளவில் கொண்டு செல்வதை நன்கு அறிந்த நபர்கள் தான் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என எண்ணிய போலீசார், தங்களது கோணத்தை சாதிக்கின் நண்பர்கள் பக்கம் திருப்பியுள்ளனர். அவர்களிடம் விசாரித்ததில், தமீம் அன்சாரியின் பலே நாடகம் அம்பலமாகியுள்ளது.
கொள்ளை சம்பவத்தின்போதும் கூடவே இருந்து, காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும் உடன் வந்த தமீம் அன்சாரி தான் இந்த கொள்ளை சம்பவத்தின் மூளையாக செயல்பட்டுள்ளார். கொள்ளையடிப்பதற்காக, வியாசர்பாடியைச் சேர்ந்த, மனோகரன், கார்த்திக், விக்னேஸ், தஞ்சாவூரை சேர்ந்த அருண்குமார் ஆகியோரை நியமித்த அன்சாரி, நண்பன் சாதிக் பெரும் பணத்துடன் செல்வது குறித்து அவர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தான், இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளிநாட்டு பணம் என்பதால், புகார் அளிக்க முடியாது என அன்சாரி தப்பு கணக்கு போட்ட நிலையில், சாதிக் காவல்நிலையத்தை அணுக, போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் வெளி வந்துள்ளது. இதையடுத்து, தமீம், மனோகரன், கார்த்திக், விக்னேஸ், அருண் என 5 பேரையும் கைது செய்த போலீசார், 13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.