ரூ.25 லட்சத்தை நூதனமாக திருடிய மகாராஷ்டிரா கும்பல்
தங்க நாணயங்கள் என கூறி 600 போலி நாணயங்களை கொடுத்து விட்டு 25 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்....
சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ - ரேணுகா தம்பதியர். சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் இவர்கள் பர்னிச்சர் கடை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவர்களின் கடைக்கு 25 வயது மதிக்கத்தக்க 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் வந்துள்ளனர். அவ்வப்போது பர்னிச்சர் பொருட்கள் வாங்குவதற்கு வந்த அவர்கள், கடையின் உரிமையாளர் ரேணுகாவிடம் நன்றாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்களிடம் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான 600 தங்க நாணயங்கள் இருப்பதாகவும், அதை ஜிஎஸ்டி வரி இல்லாமல் 25 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாக கூறியிருக்கின்றனர். அவர்களின் இந்த வார்த்தையில் மயங்கிய ரேணுகா, அந்த நாணயங்களை சோதித்து பார்த்துள்ளார். அப்போது அவை தங்க நாணயங்கள் என்பது உறுதியானதாக கூறப்படுகிறது. இதனை நம்பிய ரேணுகா அவர்களிடம் 25 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு 600 தங்க நாணயங்களை சமீபத்தில் வாங்கியுள்ளார். ஏற்கனவே தீபாவளி சீட்டு நடத்தி வரும் ரேணுகா, இந்த நாணயங்களை வைத்து முதலீடு செய்து விடலாம் என்ற எண்ணத்தில் அவற்றை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நாணயங்களை சோதித்து பார்த்த போது தான், அவை அனைத்தும் போலியானவை என தெரியவந்தது.
இதனால் அதிர்ந்து போன ரேணுகா, உடனே எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தமிழ் மற்றும் ஹிந்தியில் சரளமாக பேசிய அந்த 3 பேர் பார்ப்பதற்கு தங்க நகை வியாபாரிகள் போல இருந்ததால் அவர்களை நம்பி ஏமாந்ததாக ரேணுகாவின் கணவர் ராஜூ தெரிவித்துள்ளார். போலீசார் இந்த விசாரணையை கையில் எடுத்த போது தான் அந்த கும்பல் பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. ரேணுகாவிடம் 25 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த அந்த 3 பேரும் விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே செயின் பறிப்பு மற்றும் வீட்டை உடைத்து நகைகளை கொள்ளை அடித்தல் போன்ற சம்பவங்களில் ஈரானிய கொள்ளையர்கள் ஈடுபட்டு கைதாகி உள்ள நிலையில் இப்போது அவர்களை போலவே மற்றொரு கும்பலும் நூதனமாக கைவரிசையை காட்டியிருக்கிறது.
பொதுவாக நகைகளை கொள்ளையடிக்கும் இரானிய கொள்ளை கும்பல் விமானத்தில் தப்பிச் செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதே பாணியை இவர்களும் பின்பற்றி இருப்பதால் இவர்களும் இரானிய கொள்ளையர்களா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.