காடாக இருந்த பல்கலைக்கழகத்தை மூலிகை தோட்டமாக மாற்றிய துணைவேந்தர்

அழிந்து வரும் மூலிகை செடிகளை வளாகத்திலேயே, வளர்த்து திருவள்ளூவர் பல்கலைக்கழகம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.

Update: 2018-12-01 05:07 GMT
அழிந்து வரும் மூலிகை செடிகளை பாதுகாக்கும் வகையில், 600 வகை மூலிகை செடிகளை, வளாகத்திலேயே, வளர்த்து திருவள்ளூவர் பல்கலைக்கழகம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு, மாணவர்களும் சித்த மருத்துவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே, சேர்க்காடு பகுதியில் இயங்கி வரும், திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் 120 - க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 

இப்பல்கலைகழக துணைவேந்தராக  பதவியேற்ற முருகன்  ,  காடாக இருந்த பல்கலைக்கழகத்தை பசுமை வளாகமாக மாற்ற படிப்படியாக முயற்சிகளை மேற்கொண்டார். ஒன்றரை ஏக்கர் காலி இடத்தில் பல்கலைக்கழகத்தின் முன்பாக அரிய வகை மூலிகை செடிகளை கொல்லிமலை, மேற்கு தொடர்ச்சி என பல இடங்களில் தேடி கண்டுபிடித்து  நட்டுள்ளார்.  600 வகையான மூலிகை செடிகள் நடப்பட்டதால், பல்கலைக்கழக வளாகமே பச்சை பசேலென பசுமை வளாகமாக மாறியுள்ளது.

வெங்காரை, பவழமல்லி பெரியா நங்கை, சிறியாநங்கை, ஆடாதோடா , வெப்பாலை, நீராபிரம்மி சிறுகுறுஞ்சான் , நாகலிங்கம் நிலக்குறிஞ்சி நஞ்சு முறிஞ்சான், நொச்சி உள்ளிட்ட பல ரகங்களில் மூலிகை வகைகள் இங்கு வளர்க்கப் பட்டு வருகின்றன. கடந்த மாதம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  இப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்த போது, மூலிகை தோட்டத்தை பார்த்து பாராட்டியுள்ளார். 

மூலிகைகளை சித்த வைத்திய ஆராய்ச்சியாளர்களும் சித்த மருந்து தயாரிப்பாளர்களும் நேரடியாக இங்கே வந்து கேட்டு பறித்து செல்கின்றனர். வண்ணத்து பூச்சி, தும்பி, தேனீக்கள் போன்ற பூச்சிகள், அதிகமாக பூக்களை நாடி வருகிறது. அதனைத் தொடர்ந்து தேனீ  கூண்டுகள் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே  ஒரு அரசு பல்கலைக்கழகம் 600 வகையான மூலிகை செடிகளை நட்டு பராமரிப்பது சாதனையாக கருதப்படுகிறது. இதே போல், அரசு மற்றும் தனியார் கல்லூரி, பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் மூலிகை செடிகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்