மக்கள் திருப்தி அடையும் வரை மருத்துவ சேவை தொடரும் - ராதாகிருஷ்ணன்
கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் திருப்தி அடையும் வரை மருத்துவ சேவை தொடரும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் தொற்று நோய் உருவாக்கக் கூடிய கொசுக்களை அழிக்க கூடுதலாக 65 மருத்துவ குழுக்களை அனுப்பும் நிகழ்ச்சி, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள காமேஸ்வரம், புஷ்பவனம், கோடியக்கரை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த குழுக்களை, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முறைப்படி அனுப்பி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏற்கனவே 100 மருத்துவ குழுக்கள் அனுப்பப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மக்கள் நோய் தொற்றில் இருந்து விடுபட்டு திருப்தி அடையும் வரை அரசின் மருத்துவ சேவை தொடரும் என்றும் அவர் கூறினார்.