கஜா புயலில் சிக்கிய சரணாலயம் - புயலுக்கு பின் மீண்டும் திரும்பி வந்த பறவைகள்
கஜா புயலால் சரணாலயத்தில் இருந்த மரங்கள் சேதமடைந்தாலும் உயிர் தப்பிய பறவைகள் மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கே வந்து சேர்ந்தன.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வன சரகத்தில், உதய மார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. 44 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இந்த சரணாலயத்தில் நாரை, கூழைகுடா, மயில்கால் கோழி, நீர் காகம், சாம்பல் கொக்கு உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.
இந்த சரணாலயத்திற்கு தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் பார்வையிட வருவர். இந்த நிலையில் கஜா புயல் காரணமாக, சரணாலயத்தில் இருந்த ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் அங்கிருந்த பறவைகள் எல்லாம் தன் இருப்பிடத்தை விட்டு வெளியேறியது. இருந்தபோதிலும் பறவைகள் எதுவும் கஜா புயலால் உயிரிழக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது மரங்கள் சாய்ந்து கிடந்தாலும், இருக்கும் மரங்களில் தஞ்சமடையும் நோக்கில் சரணாலயத்தை நோக்கி பறவைகள் வந்துள்ளன.