தரைப் பாலம் உடைப்பு : 20 கிராம போக்குவரத்து துண்டிப்பு
அரியலூர், கடலூர் மாவட்டத்தை இணைக்கும் வெள்ளாற்று தரைப்பாலம் உடைந்ததால், 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே, வெள்ளாற்றின் குறுக்கே, அமைக்கப்பட்ட தற்காலிகமாக செம்மண் சாலையை பயன்படுத்தி, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வந்தனர். அதே போல், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செந்துறை, ஜெயங்கொண்டம், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக, பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக செம்மண் சாலை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இரண்டு மாவட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.