நெல் ஜெயராமனுக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு
பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் சிறப்பாக சேவையாற்றிய நெல் ஜெயராமனுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாப்பிள்ளை சம்பா, ராஜமன்னார், கவுனி, உள்பட 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, அதை விவசாயிகளிடையே ஜெயராமன் பிரபலபடுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நெல் ஜெயராமன், இதுவரை சுமார் 37,000 விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தி, தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் உற்பத்தியினை உயர்த்திய பெருமைக்குரியவர் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமன் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பி, மீண்டும் விவசாயிகளுக்கு சேவையாற்ற வேண்டும் என்று, முதலமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
நெல் ஜெயராமன் ஆற்றிய சேவையினை அரசு அங்கீகரித்து பாராட்டும் விதமாக 5 லட்சம் ரூபாய் நிதியினை உடனடியாக அவருக்கு வழங்கிட வேளாண்மைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.