"சத்துணவு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்" - அமைச்சர் சரோஜா
குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* தமிழகத்தில் 43 ஆயிரத்து 205 சத்துணவு மையங்களில் 51 லட்சத்து 96 ஆயிரம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
* தமிழகத்தில் உள்ள சத்துணவு பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீதம் சம்பள உயர்வுடன் சிறப்பு காலமுறை சம்பளம் வழங்கப்பட்டதோடு, 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று சம்பளம் உயர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
* தமிழகத்தில் மட்டும் தான் சத்துணவு அமைப்பாளர் என்ற பணியிடம் உள்ளதாகவும், இந்த பணியிடம் மற்ற மாநிலங்களில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
* ஓய்வு பெற்ற 54 ஆயிரத்து 340 சத்துணவு பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ஆயிரத்து 500ல் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சத்துணவு பணியாளர்களின் சம்பளம், மற்ற படிகள் உள்ளிட்ட நிர்வாக செலவுக்கு 58 சதவீதத்தை அரசு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
* எனவே லட்சக்கணக்கான குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார்.