புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடைபெற்ற முறைகேடு - தடை நீட்டிப்பு
புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடைபெற்ற முறைகேடு குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* புதிய தலைமை செயலகம் கட்டியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
* வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம், ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிட்டார். விசாரணை ஆணையத்தின் ஆவணங்களை ஆராய்ந்து அவற்றில் முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்து கொள்ளலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
* இதனிடையே, முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
* இந்த உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அடங்கிய அமர்வு, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
* இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் 375 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் ரகுபதி ஆணையத்திற்கு அளித்த அறிக்கையின் அடிப்படையிலே, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
* ரகுபதி ஆணையம் அறிக்கை எதுவும் தாக்கல் செய்யாத நிலையில், எப்படி விசாரணைக்கு உத்தரவிட முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஸ்டாலினின் மனு குறித்து நவம்பர் 2-ஆம் தேதிக்குள் அரசு பதில் அளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.