70 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த அவலூர்பேட்டை வாரச்சந்தை...

விழுப்புரம் மாவட்டத்தில் 70 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த ஒரு சந்தையின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

Update: 2018-10-15 14:01 GMT
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே இருக்கிறது அவலூர்பேட்டை கிராமம். இந்த கிராமத்தின் அடையாளமாக இருக்கிறது இங்கு நடக்கும் வாரச்சந்தை..வாரந்தோறும் புதன் கிழமை காலையில் நடக்கும் இந்த சந்தை கிட்டத்தட்ட திருவிழாக் கோலமாகவே காட்சி தருகிறது. அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த சந்தை பிற்பகல் தாண்டியும் மக்கள் வெள்ளத்துடன் பரபரப்பான ஒரு இடமாகவே இருக்கிறது. கறவை மாடு, எருமை மாடு, கன்றுக்குட்டிகள் என எது வேண்டுமானாலும் இங்கு வந்து குறைவான விலையில் வாங்கிச் செல்லலாம் என்பதே இந்த சந்தையின் சிறப்பு. செம்மறி ஆடு, குறும்பாடு, வெள்ளாடு, நாட்டுக்கோழிகள் என எல்லாம் இங்கே கிடைக்கிறது. கால்நடைகளை வாங்கும் போது வியாபாரிகளிடம் இருந்து வாடிக்கையாளர்கள் கையில் துண்டை போர்த்தி விலை பேசுகிறார்கள். ஒரு விரல் பிடித்தால் ஆயிரம் ரூபாயாம். இரண்டு விரல் என்றால் 2 ஆயிரம். மற்றவர்களுக்கு விலை தெரியக் கூடாது என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதுமட்டுமின்றி கால்நடைகளுக்கு தேவையான கயிறுகள், சலங்கை மணி என எல்லாம் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறுதானியங்கள், பயறு வகைகள், மளிகை சாமான்கள் என நமக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் ஒரு இடமாகவே இந்த சந்தை உள்ளது. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள விவசாயிகள் விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியிருப்பதால் தங்கள் நிலத்தில் விளைவிக்கப்படும் பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் வியாபாரிகளும் உண்டு. அதனால் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், கீரைகள், பழங்கள் என எல்லாம் இங்கு குறைவான விலையில் கிடைக்கிறது. 

வாரத்தில் ஒருநாள் இங்கு வந்து பை நிறைய பொருட்களை வாங்கிச் சென்று பணத்தை மிச்சப்படுத்தும் மக்கள் உண்டு. அன்றாட தேவைக்கு உபயோகப்படுத்தும் அரிவாள்மனை, கத்தி, அரிவாள் போன்ற பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. மீன், கருவாடு வாங்க விரும்புவோரும் இந்த சந்தைக்கு வந்து செல்வதை பார்க்க முடியும். இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை நடக்கும் ஒரு இடமாக அவலூர்பேட்டை சந்தை உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா போன்ற பல மாநிலங்களில் இருந்தும் இங்கு வியாபாரிகள் வருகிறார்கள். ஊராட்சிக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் சந்தையாக இது இருப்பதால் மக்களின் ஆதரவோடு சிறந்த ஒரு சந்தையாக செயல்பட்டு வருகிறது... 


Tags:    

மேலும் செய்திகள்