கீழடி பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் வழங்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை
கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை, மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், கீழடியில், மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2 ஆயிரத்து 300 ஆண்டு பழமையானது எனத் தெரிவித்துள்ளார்.
இதில், பானை ஓடுகள், செங்கற்கள் போன்றவற்றில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதனை மறைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, கீழடி அகழாய்வு அறிக்கை தயாரிக்க பெங்களூரு தொல்லியல் துறை கண்காணிப்பாளரை நியமித்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என, மனுவில் அவர் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், கீழடியில் முதல் இரண்டு கட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கபட்ட பொருட்களை பெங்களூருவில் உள்ள மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் வழங்கக்கூடாது என உத்தரவிட்டனர்.
கட்டாயம் வழங்க வேண்டுமென்றால் தமிழக தொல்லியல் துறை ஆணையர் முன்பாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். அகழாய்வு குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரித்த ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் வரும் 31ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.