தூத்துக்குடி கலவர வழக்கு - கையில் எடுத்தது சிபிஐ
தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவர வழக்கு தொடர்பாக, 20 அமைப்புகளுக்கு எதிராக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ சார்பில் தற்போது முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட 20 அமைப்புகளுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணையை தொடங்கி இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.