மாற்றுத்திறனாளி மாணவி பலாத்கார வழக்கு - உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி, பலாத்கார வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை, குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு கடந்த 5ம் தேதியன்று, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டர். இதை ரத்து செய்யக் கோரி சுரேஷ், ரவிகுமார், அபிஷேக் உள்ளிட்ட 6 பேரின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், எந்த ஆதாரமும் இல்லாமல் குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு, இது குறித்து 3 வாரத்தில் பதிலளிக்குமாறு, உள்துறை செயலாளர்,சென்னை காவல் ஆணையர், அயனாவரம் மகளிர் காவல் ஆய்வாளர் மற்றும் புழல் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.