தமிழகத்தில் காணாமல் போன 9177 குழந்தைகள் மீட்பு - காவல்துறை
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் காணாமல் போன 9 ஆயிரத்து 177 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தெருவோரம் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் சில ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்டன. அக்குழந்தைகளை கண்டுபிடிக்கக்கோரி எக்ஸனோரா அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், குழந்தைகள் கடத்தல் தொடர்பாக 4 ஆயிரத்து 824 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4 ஆயிரத்து 808 பேர் ஜாமீன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து வெளிநாட்டுக்கு எந்த குழந்தையும் கடத்தப்படவில்லை என்றும், கடந்த 2 ஆண்டுகளில் 9 ஆயிரத்து 882 குழந்தைகள் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதில் 9 ஆயிரத்து 177 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் 17 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எஞ்சிய 688 குழந்தைகளை தேடி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுளில் தேடினால் கூட கூடுதல் தகவல்கள் கிடைத்திருக்கும் என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் பதிவு செய்யப்படாமல் உள்ள குழந்தைகள் காப்பகங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என அக்டோபர் 25ஆம் அறிக்கை அளிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.