தூய்மை பள்ளிக்கான விருது பெற்ற அரசு பள்ளி
சத்தியமங்கலம் அருகே தூய்மைப் பள்ளிக்கான விருது பெற்ற அரசுப் பள்ளி ஒன்று தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் திறம்பட செயல்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது இந்த அரசு மேல்நிலைப்பள்ளி. விவசாய தோட்டங்களுக்கு மத்தியில் மாணவர்களை ஈர்க்கும் வகையில் இயங்கி வரும் இந்த பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
சொட்டு நீர் பாசனத்தின் மூலம் மரக்கன்றுகள் வளர்த்தல், சுகாதாரமான சூழல் என அனைத்திலும் தனித்துவத்தோடு இயங்கி வருகிறது இந்த பள்ளி. இந்த நிலையில் தான் இந்த ஆண்டின் தூய்மைப் பள்ளிக்கான மாநில அரசின் விருதை பெற்று தன் மதிப்பை மேலும் உயர்த்தி இருக்கிறது இந்த பள்ளி.
பள்ளியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி வளாகமே பிளாஸ்டிக் இன்றி இயற்கையான முறையில் காணப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது பிளாஸ்டிக் கவர் சுற்றிய சாக்லேட்டுகளுக்கு பதிலாக கல்கண்டு, ஆரஞ்சு மிட்டாய் போன்றவற்றையே வழங்குகிறார்கள்.
மாணவர்களுக்கு சுகாதாரமான கழிவறைகள், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள், சுகாதாரமான சூழலில் உணவு என அனைத்தும் தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் உள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு கல்வியோடு ஒழுக்கமும் போதிக்கப்படுவதால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.