அதிக ஊனம் என மருத்துவ சேர்க்கை மறுக்கப்பட்ட வழக்கு - சேர்க்கை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
வரையறுக்கப்பட்டதை விட அதிக ஊனம் கொண்டுள்ளதாக கூறி, மாணவிக்கு மருத்துவ படிப்பில் சேர்க்கை வழங்க மறுத்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி நந்தினியின் விண்ணப்பம்,
மருத்துவ கலந்தாய்வின் மாணவர் சேர்க்கைக்கு தகுதியில்லை எனக் கூறி, நிராகரிக்கப்பட்டது. இது குறித்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கல்யாண சுந்தரம் அடங்கிய அமர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் தகுதியான மாணவர்கள் யாரும் இல்லாவிட்டால், 40 முதல் 50 சதவீத ஊனம் கொண்டவர்கள் நியமிக்கப்படுவர் என கொள்கை விளக்க குறிப்பேட்டில் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினர். மேலும், அதிக ஊனம் கொண்ட மனுதாரருக்கு தகுதியில்லை எனக் கூற முடியாது எனவும், உதவி உபகரணங்கள் மூலம் அவரால் படிப்பை முடிக்க முடியும் எனவும் தெரிவித்து,மாணவிக்கு சேர்க்கை வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும்,நீட் தேர்வை நிர்பந்திக்காமல் மாணவி நந்தினிக்கு நடப்பாண்டில் மருத்துவ படிப்பில் சேர்க்கை வழங்க உத்தரவிட்டனர்.