கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம்...
கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டத்தை, கல்வித்துறை அமல்படுத்தி உள்ளது.
‛டிஸ்லெக்சியா' எனப்படும் கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகள், தமிழகத்தில் 10 முதல் 15 சதவிகிதம் உள்ளனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், அதிகளவு மாணவர்கள் படிப்பதால், அவர்களில் டிஸ்லெக்சியா பாதிப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து, உரிய சிறப்பு பயி்ற்சி அளிக்க, கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
முதல்கட்டமாக சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. டிஸ்லெக்சியாவில் பல வகைகள் இருப்பதாகவும், அது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கூறுகிறார் டிஸ்லெக்சியா சங்க தலைமை பயிற்சியாளர் லதா வசந்தகுமார். டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்படும் குழந்தைகள், மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவர்கள் கிடையாது என்பதே, பயிற்சியாளர்களின் கருத்தாக உள்ளது. தவறினால் கற்றலில் குறைபாடு என்ற நிலை தாண்டி, நடத்தையிலும் பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கிறார் மற்றொரு பயிற்சியாளரான ஹரிணி. சென்னையை தொடர்ந்து, இப்பயிற்சி மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளில் 5 லட்சம் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் டிஸ்லெக்சியா, சங்க தலைவர் சந்திரசேகர். பள்ளி கல்வித்துறை அமல்படுத்தி உள்ள இந்த திட்டத்தால், கற்றலில் குறைபாடுள்ள லட்சக்கணக்கான குழந்தைகள், குறிப்பாக கல்வியில் பின் தங்கியுள்ள வட மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பலன் கிடைக்கும் என்பதோடு, இதனால் கல்வித்தரமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது!