முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் உடைந்தன...
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேல் அணையில், 9 மதகுகள் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இடத்தை தமிழக அரசின் முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டம் முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான மேல் அணை பாலம் உள்ளது. அப்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பொது மக்கள் நடந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக 45 மதகுகளை கொண்ட முக்கொம்பு கொள்ளிடம் மேல் அணையில் 9 மதகுகளும், பாலத்தின் ஒருபகுதியும் நேற்றிரவு திடீரென உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மதகுகள் உடைந்த பகுதியில் அதிக அளவு தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
"அரசு முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் ஆய்வு"
இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் தடுப்புச் சுவர் உடைந்த பகுதிக்கு தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே. பிரபாகர், முதன்மை தலைமை பொறியாளர், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஆகியோர் இன்று காலை சென்று ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேலணை மதகுகள் உடைந்ததை நிரந்தரமாக செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மதகுகள் உடைந்ததால் விவசாயத்திற்கு நீர் வழங்குவதில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் பிரபாகர் கூறினார்.