மாணவர்களிடையே பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்தது...

இந்த ஆண்டு நடைபெற்ற கலந்தாய்வில் 9 பொறியியல் கல்லூரிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ள தகவல் இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

Update: 2018-08-23 05:52 GMT
கை நிறைய சம்பளத்துடன் வேலை என்ற நிலை இருந்ததால் பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டும் காலம் இருந்தது. காலப்போக்கில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும்  அதிகரித்தது. ஆனால், தற்போது மாணவர்கள் இடையே பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்து வருவதை நடப்பாண்டு மாணவர்கள் சேர்க்கையின் நிலவரம் காட்டுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 581 இடங்களுக்கு நடைபெற்று வந்த  ஆன் லைன் கலந்தாய்வு கடந்த ஞாயிற்றுகிழமையுடன் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 74 ஆயிரத்து 601 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 97 ஆயிரத்து 980 பொறியியல் படிப்புக்கான இடங்கள் காலியாக உள்ளன. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, நடப்பாண்டில், 5 சுற்றுகள் நடந்த கலந்தாய்வு முடிவில், சுமார் 47 கல்லூரிகளில் ஒற்றை இலக்கில் மாணவர் சேர்க்கை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஆசான், ஸ்ரீ கிருஷ்ணா உள்ளிட்ட 6  பொறியியல் கல்லூரிகளில் 3 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதேபோல, லார்டு வெங்கடேஸ்வரா, மாதா மற்றும் ஸ்ரீ ஆண்டாள் அழகர்  உட்பட 6 பொறியியல் கல்லூரிகளில் 2 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். ஸ்ரீ கிருஷ்ணா, ஸ்ரீ அரவிந்தர், ரோவர் உள்ளிட்ட 9 கல்லூரிகளில் தலா ஒரே ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 

81 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான இடங்கள் நிரம்பியுள்ளன. இதேபோல் 268 கல்லூரிகளில் 100க்கும் குறைவான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 150 பொறியியல் கல்லூரிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

சிறந்த கல்லூரிகள் என பெயர் பெற்ற கல்லூரிகளில் கூட மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது. ஒரு சுயநிதி கல்லூரி உள்ளிட்ட மொத்தம் 10 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. 

கடந்த ஆண்டு பிஇ இயந்திரவியல் படிப்பை அதிகம் பேர் தேர்வு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு மாணவர்களின் மோகம் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பின் பக்கம் திரும்பியுள்ளது. 15 ஆயிரத்து 149 மாணவர்கள் இந்த படிப்பை தேர்வு செய்துள்ளனர். 

பிஇ சிவில் படிப்பு மாணவர் சேர்க்கையும் இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது. 5 ஆயிரத்து 232 மாணவர்கள் மட்டுமே இந்த துறையை தேர்வு செய்துள்ளனர். இதன் மூலம் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்திருப்பது பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் குறைவதை காட்டுகிறது. 
 
Tags:    

மேலும் செய்திகள்