ஹாலிவுட் பட பாணியில் கொள்ளை
வாக்கி டாக்கி மூலம் தகவல்களை பரிமாறி கொள்ளையடிக்கப் போகும் வீடுகளை ஒன்றுக்கு ஐந்து முறை நோட்டம் விட்டு ஒரு தடயத்தைக் கூட விட்டுச் செல்லாமல் கொள்ளையடிக்கும் பலே கும்பலை சென்னை மாநகர காவல்துறை கைது செய்துள்ளது.
* சென்னை அண்ணாநகரில் கடந்த மாதம் மட்டும் 17 திருட்டு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. போலீஸ் ரோந்துகள் அதிகரிக்கப்பட்ட நிலையிலும் கொள்ளை சம்பவங்கள் குறையாதது குறித்து காவல்துறைக்கே அதிர்ச்சி அளித்தது. தனிப்படை களத்தில் இறங்கியது. தனிப்படையிடம் 4 கொள்ளையர்கள் சிக்கினார்கள். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் வெளியிட்ட தகவல்கள் ஒரு ஆக்ஷன் சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்தது.
* கொள்ளை கும்பலின் தலைவன் திருவாரூர் முருகன் என்பதும், இவனுக்கு வலது கரமாக கொள்ளையில் கலக்கியவன் நெல்லை தினகரன் என்பதும் தெரியவந்தது. தனிப்படை இருவருக்கும் வலை விரித்தது. தற்போது நெல்லை தினகரன், காளிதாஸ்,லோகநாதன் ஆகிய 3 பேரும் தனிப்படையிடம் சிக்கியுள்ளனர். இவர்களிடமும் விசாரணை தீவிரமானது. இதிலும் அடுத்த அதிர்வுகள் வெளியாயின.
* கொள்ளையடிக்க அந்தந்த ஏரியாவில் இருப்பவர்களையே பெரும் பணம் கொடுத்த தரகர்களாக ஈடுபடுத்தியதும், செல்போன்களை பயன்படுத்தினால் மாட்டிவிடுவோம் என்று யோசித்து வாக்கி டாக்கி மூலம் கொள்ளைகளை அரங்கேற்றியதும் தெரியவர அதிர்ந்தது தனிப்படை.
* தனிப்படை விசாரணை தெரியவந்த சிலவற்றை தற்போது பார்க்கலாம். அண்ணா நகர் பகுதி கொள்ளைகளை எடுத்துக் கொண்டால் அந்தப் பகுதியில் தரகர்கள் தரும் தகவல்களை வைத்து பூட்டியிருக்கும் வீடுகளை இந்த கும்பல் முதலில் நோட்டம் விடும். காலை முதல் மாலை வரை ஐந்து முறை சில மணி நேர இடைவெளிகளில் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் நோட்டம் விடுவார்கள். இறுதியில் திருட்டுக்கு உகந்த வீடுகளை தேர்ந்தெடுத்து சுவர்களில் சில குறியீடுகளை இட்டுச் செல்வார்கள்.
* கொள்ளை குறியீடு போடப்பட்டிருக்கும் விடூகள் அமைந்துள்ள பகுதிகளில் கொள்ளை கும்பல் வாக்கி டாக்கி மூலம் கட்டளைகளைப் பிறப்பித்து கொள்ளையடித்து செல்லும் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
* அண்மைக்காலமாக திருட்டு நடந்த ஒரு சில மணி நேரங்களில் திருடர்கள் மொத்தப்பேரும் போலீஸ் கைப்பிடிக்குள் கொண்டு வரப்பட்ட சம்பவங்கள் ஏராளம். இதற்கு காரணம் அந்த கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன்கள்தான். இதைத் தவிர்க்க யோசித்த முருகன் கும்பல் வாக்கி டாக்கியை கையில் எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதே பாணியில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் இந்த கும்பல் கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது.
* கைதான 3 பேரிடமிருந்து, 3 கிலோ தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி நகைகள், 1000 யூரோ டாலர்கள், 2 வாக்கி டாக்கிகள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதானவர்கள் கொடுத்த தகவலை வைத்து வாக்கி டாக்கி ஸ்டைல் திருட்டுக்கு மூளையாக இருக்கும் திருவாரூர் முருகனைப் பிடிக்க போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.