"நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீர்தேக்கி வருகிறோம்" - கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்
முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டு உள்ளதாகவும், அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டு உள்ளதாகவும், அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள பதில் கடிதத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தான், முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். முல்லை பெரியாறு அணையில் இருந்து எவ்வளவு தண்ணீரை, வைகை அணைக்கு கொண்டு செல்ல முடியுமோ, அந்த அளவுக்கு குகைப் பாதை வழியாக அனுப்பி வருகிறோம் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து குறித்து அறிய தமிழக அதிகாரிகள் அனுமதிக்கபடவில்லை என்றும், மழையளவு மற்றும் நீர்வரத்து குறித்து தமிழக அதிகாரிகளுடன் கேரள அதிகாரிகள் பகிர்ந்து கொள்ள அறிவுறுத்துமாறும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். முல்லைப் பெரியாறு அணைக்கு மின்வசதியை உடனடியாக தருமாறு கேரள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அணைக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து, தமிழக அதிகாரிகள் நீரை திறந்து விடுவதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.
நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பது குறித்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
வரலாறு காணாத அளவில் கேரளாவில், கனமழை பெய்து வருவதாகவும், 14 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் சேர்ந்த ரசூல் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார். மேலும், முல்லை பெரியாறு அணையை நிர்வகிப்பதில் தமிழகம் மற்றும் கேரளா இடையே ஒற்றுமை இல்லாத நிலையில் கேரள மக்களுக்கு சிக்கலை உருவாக்கி உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், மேலாண்மையை கண்காணிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் ரசூல் கோரியிருந்தார். மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைப்பது தொடர்பாக இன்று நடைபெறும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் விவாதித்து, பிற்பகல் 2 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.