கொள்ளிடம் ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப் பெருக்கு
பழைய கொள்ளிடம் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இரண்டாவது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 3 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பழைய கொள்ளிடம் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இரண்டாவது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 3 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆற்றுக்கும் இடையில் உள்ள திட்டுக்காட்டூர், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி ஆகிய 3 கிராமங்களும், தண்ணீர் சூழ்ந்து தீவு போல காட்சி அளிக்கின்றன. இங்குள்ள மக்கள் சிதம்பரம் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு வந்து செல்ல படகுகளையே பயன்படுத்தி வருகின்றனர். இந்தப்பகுதியில், பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் இரு கரைகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் குறுக்குத்துறை முருகன் கோவில் வெள்ள நீரில் மூழ்கியது. ஆற்றுப் பாலத்தில் பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சத்தியமங்கலம் அருகே மாயாற்றில் வெள்ளப் பெருக்கு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெங்குமரஹாடா கிராமம் மாயாற்றின் ஒரு கரையில் உள்ளது. இங்கு சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாயாற்றில் பாலம் இல்லாததால் பரிசலில் ஆற்றைக் கடந்து சத்தியமங்கலம் மற்றும் பவானிக்கு பேருந்தில் சென்று வருவது வழக்கம். தற்போது 2 நாட்களாக பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தெங்குமரஹாடா கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். பரிசலில் செல்லும் ஆபத்தான பயணத்தை தவிர்க்க வனத்துறை மற்றும் கிராம ஊராட்சி பணியாளர்கள் தண்டோரா மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.