சுதந்திர தின விழாவை முன்னிட்டு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
72 வது சுதந்திர தின விழா நாளை மறுதினம் நாடுமுழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் மூன்றாவது நாள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
* சுதந்திர தினத்தன்று, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றுகிறார். இதற்காக புனித ஜார்ஜ் கோட்டை முன்பு பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் மற்றும் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
* சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்காக, ராஜாஜி சாலையில் ஏற்கனவே இரண்டு ஒத்திகை அணிவகுப்பு நடைபெற்ற நிலையில் இன்று இறுதி ஒத்திகை நடைபெற்றது. இந்த அணிவகுப்பு ஒத்திகையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், பெண் காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர், கமாண்டோ படை வீரர்கள், தேசிய மாணவர்படை, குதிரைப்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
* தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் ஒத்திகை நிகழ்ச்சிக்கு வருகை தந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டனர்.
செங்கோட்டையில் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி
நாட்டின் 72வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் முழு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முப்படையினரும், பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகள் ஸ்கேட் நடனம்
குஜராத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க பள்ளி குழந்தைகள் ஸ்கேட் நடனம் பயின்று வருகின்றனர். சூரத் நகரில் கடந்த ஒரு மாதமாக மூன்று முதல் பதினைந்து வயதிக்கு உட்பட்ட 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஸ்கேட் நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து, அவர்கள் ஹிப் ஹாப், தாண்டியா, சால்சா உள்ளிட்ட பல்வேறு நடனங்களை கற்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.