கூட்டுறவு சங்க தேர்தல்- நாளை வாக்கு எண்ணிக்கை
இரண்டாம் நிலை கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறது.
இரண்டாம் நிலை கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 18 ஆயிரத்து 465 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகளை அறிவிக்க தடைகளை விலக்கி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 3ஆம் தேதி உத்தரவிட்டு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவித்தல் ஆகிய பணிகள் நாளை காலை 10 மணி தொடங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. 3ஆம் மற்றும் 4ஆம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை மறுதினம் (7ஆம் தேதி) அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 3ஆம் மற்றும் 4ஆம் நிலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் வரும் 11ஆம் தேதி நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்ட, ரத்து செய்யப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, பாதியில் நிறுத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.