ஏடிஎம்மில் அதிகம் பயன்படுத்தும் மொழி எது?
ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க செல்லும் போது நீங்கள் எந்த மொழியை பயன்படுத்துகிறீர்கள்?... தமிழா? ஆங்கிலமா? ...தமிழகம் முழுவதும் எந்த மொழியை அதிகம் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? இது குறித்து, தந்தி டிவி எடுத்த கள ஆய்வு இதோ...
அதிகம் பயன்படுத்தும் மொழி தமிழா? ஆங்கிலமா?
தமிழகத்தில் உள்ள ஏடிஎம் மையங்களில் எந்த மொழியை தமிழ் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர், என்பதை அறிய, தந்தி டிவி தமிழகம் முழுவதும் ஒரு கள ஆய்வை மேற்கொண்டது. இந்த கள ஆய்வில் தமிழக மக்களிடையே, 3 கேள்விகள் முன் வைக்கப்பட்டன.
அதில், ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க செல்லும் போது எந்த மொழியை பயன்படுத்துகிறீர்கள் என்ற கேள்விக்கு, 67 சதவித மக்கள், ஆங்கிலத்தை தான் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். 33 சதவித மக்கள் மட்டுமே தமிழை பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பதாக கூறுகின்றனர். ஏடிஎம்மில் பணம் எடுக்க, ஆங்கிலத்தை தான் பயன்படுத்துகிறோம் என்று தெரிவித்தவர்களில், ஏன் ஆங்கிலத்தை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது, ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள தமிழ் புரிந்து கொள்ளும்படியாக இல்லை என்று 50 சதவித மக்கள் தெரிவித்துள்ளனர். ஆங்கிலத்தை பயன்படுத்தி பழகிவிட்டது என்று 34 சதவிதம் மக்களும், ஏடிஎம் இயந்திரத்தில் தமிழே இல்லை என்று 16 சதவிதம் மக்களும் தெரிவித்துள்ளனர். தமிழை பயன்படுத்தி பணம் எடுப்பவர்களிடம், ஏன் தமிழை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது, தமிழ் பற்று தான் காரணம் என 52 சதவிதம் மக்களும், தமிழ் தான் தெரியும் என்று 48% மக்களும் தெரிவித்துள்ளனர். இது தவிர ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்த தெரியாது என்றும் ஒரு சிலர் தெரிவித்துள்ளனர்.