வீங்கும் கால்கள்.... அதிர்ச்சியில் இளைஞர்கள்....
திடீரென கால்கள் வீங்கி, ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த்தன்மை தெரியாமல் ஒரு கிராமமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ளது இளம்புவனம் கிராமம். இங்குள்ள பெரும்பாலானோர் தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர். சாலை போடும் பணி, கட்டிட பணி என்ற வகையில் கூலித் தொழிலாளர்களும் வசித்து வருகின்றனர். சமீபகாலமாக, இந்த கிராமத்தினர் திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில், 8 பேர், மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிய சில நாட்களிலேயே, யானைக்கால் நோய் போன்ற பாதிப்பை சந்திப்பதாகவும், அச்சத்தில் உறைந்துள்ளனர். மாதக்கணக்கில் வீக்கம் குறையாத நிலையில், வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக, நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர். இது, கொசுக்கடியால் ஏற்படும் பாதிப்பு என்றும், ஆனால், யானைக்கால் நோய் பாதிப்பல்ல என்றும் மருத்துவர்கள் அலட்சியமாக கூறுவதாக, இந்த கிராமத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். நோயாளிகளை அலைக்கழிப்பதை தவிர்த்து விட்டு, நோய்த்தன்மையைக் கண்டறிந்து, இந்த கிராமத்தினரைப் பாதுகாக்க வேண்டும் என்பதே, இவர்களது எதிர்பார்ப்பாகும்.