11 ஆயிரம் மரங்களை நட்டுள்ளார் 81 வயது முதியவர்

விறகு கடையில் வேலை பார்த்து வந்த முதியவர் ஒருவர் இராஜபாளையத்தை பசுமையாக்கும் பணியியில் ஈடுபட்டு வருகிறார்.

Update: 2018-07-09 05:34 GMT
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நக்கணேரி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. 81 வயதுடைய இவர் விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். சுமார் 25 வருடம் இந்த தொழிலை செய்து வந்த கருப்பையா தனது மகன் ஓய்வு எடுக்குமாறு கூறியதை அடுத்து மரம் வெட்டும் தொழிலிருந்து ஓய்வு எடுத்தார். தாம் இத்தனை ஆண்டுகள் ஏராளமான மரங்களை வெட்டியதை ஒரு பாவசெயலாக உணரத்துவங்கினார் கருப்பையா.தமது  செயலுக்கு பிரயாசித்தம் தேடும் விதமாக ஏராளமான மரக்கன்றுகளை  நட்டு வருகிறார் கருப்பையா.

முதன் முதலில் தனது மகன் மற்றும் நண்பர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து மரக்கன்றுகளை வாங்கி நட்டு வந்துள்ளார். தற்போது தமிழக வனத்துறை வழங்கிய மரக்கன்றுகளையும் நட்டு பராமரிக்கிறார். முதலில் தான் மரம் நடும் பொழுது சிலர் கேலி செய்ததாகவும் அதையெல்லாம் கவனிக்காமல் தொடர்ந்து  தமது பணியை செய்து வருவதால், தற்போது பாராட்டுகளை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.ஒரு மரக்கன்றை நட்டால் மட்டும் அது வளர்ந்து விடாது என்பதால் ஒவ்வொரு மரக்கன்றையும் குறைந்தது மூன்று வருடமாவது  கவனிப்பதாக கூறுகிறார்.

தினமும் காலை 7 மணிக்கு தான் நட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஒரு தள்ளு வண்டியில் குடங்களுடன் செல்கிறார்.இதுவரை கருப்பையா இராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வேம்பு, வாகை, நெல்லி, மருது  உட்பட 11 ஆயிரம் மரங்களை நட்டுள்ளாராம். இவரது இந்த செயலுக்கு அரசு சார்பிலும் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு விருதுகள் மற்றும் பாராட்டுகள் கிடைத்து வருகிறது. தனக்கு வயது ஆகிவிட்டதால்  தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ள கருப்பையா,  அரசோ அல்லது தனியாரோ தனது பணியை முன்னெடுத்து செல்லவேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளார். கருப்பையாவை அப்பகுதி சிறுவர்கள் மரதாத்தா என செல்லமாக அழைக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்