உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 32வது போட்டியில் நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா இமாலய வெற்றி பெற்றது.
புனேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் பவுமா 24 ரன்களுக்கு போல்ட் ஓவரில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு குயிண்டன் டிகாக், வான் டெர் டுசன் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிகாக், சதம் விளாசி 114 ரன்களுக்கு கேட்ச் ஆனார். பவுண்டரிகளைப் பறக்கவிட்ட வான் டெர் டுசனும் சதம் அடித்து 133 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவர்களில் டேவிட் மில்லர் அதிரடி அரைசதம் அடிக்க, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு தென் ஆப்பிரிக்கா 357 ரன்கள் குவித்தது.