பிசிசிஐ-யில் கங்குலிக்கு "எக்ஸிட்".. தலைவராக தேர்வானார் ரோஜர் பின்னி!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யின் புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ளதால், தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்து இருந்தது.
இதன்படி, தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார்.
வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யாத நிலையில், மும்பையில் இன்று நடைபெற்ற பிசிசிஐ வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
67 வயதாகும் ரோஜர் பின்னி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.
1979ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியில் ஆடிய பின்னி, 1983ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.