3வது டெஸ்ட்-தோல்வியை தவிர்க்க போராட்டம்: 432 ரன்கள் குவித்த இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
இரு அணிகளிடையிலான 3 வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 78 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டின் அபார சதத்தால், வலுவான நிலையை எட்டியது. இங்கிலாந்து 432 ரன்கள் குவித்த நிலையில், 354 ரன்கள் பின் தங்கியவாறு ஆட்டத்தை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் இந்திய அணியில் ரோகித் சர்மா, 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், விராட் கோலி, புஜாரா இணை நிலைத்து நின்று ஆடி வருகிறது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே மேலும் 139 ரன்கள் இந்திய அணிக்கு தேவைப்படுகிறது. எனவே தோல்வியை தவிர்க்க போராடும் நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.