ஓபிஎஸ்ஸின் கடைசி அஸ்திரம்.. யார் தூக்கம் கெட போகிறது இன்று?.. இறுதி தீர்ப்பு..பீதி.. பதற்றம்
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது... இந்த நிலையில் வழக்கில் இதுவரையில் நடந்தது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்...
2022 ஜூன் மாதம் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமானது.
இதனையடுத்து நடந்த ஜூலை 11 பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் 2022 ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஜூலை 11 அதிமுக பொதுக்குழு செல்லாது; இரட்டைத் தலைமையே தொடரும் என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு 2022 செப்டம்பர் 2 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.
ஈ.பி.எஸ். தலைமையில் நடைபெற்ற ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது.
அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. பிப்ரவரி 23 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
தீர்மானங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தை நாடவும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
மார்ச் 28 ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க கோரிய ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரியதையும் நிராகரித்தார்.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேர் தொடர்ந்த மேல்முறையீடு மனுக்கள் தொடர்பாக இறுதிக்கட்ட விசாரணையை மேற்கொண்ட 2 நீதிபதிகள் அமர்வு, ஜூன் 28 தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. இந்த தீர்ப்பு இன்று வெளியாகவிருக்கிறது.