அதிமுக நிர்வாகியை வழிமறித்து கொல்ல முயன்ற கும்பல் - ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். தொழிலதிபரான இவர், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகியான நிலையில், இவரது மனைவி கவுன்சிலராக உள்ளார். சம்பவத்தன்று ஸ்ரீபெரும்புதூர் - ஓரகடம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த மோகனை, மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வழிமறித்து ஆயுதங்களால் தாக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. கும்பலிடம் இருந்து உயிர் தப்பிய மோகன், போலீசில் புகாரளித்த நிலையில், தப்பியோடியவர்களை போலீசார் தேடி வந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தை சேர்ந்த குமரேசன், ஜெயக்குமார் மற்றும் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த அபிஷேக் ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவர மூவரையும் குன்றத்தூர் சாலையில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்ய முயன்ற போது, மூவரும் தப்பியோடியதால், கீழே விழுந்து கை, கால் எலும்புகளை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மூவருக்கும் மாவுக்கட்டு போட்ட போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.