அப்பவே அப்படி... தமிழகத்தின் ஒரே பெண் எதிர்க்கட்சி தலைவர்

தமிழக முதல்வராக அதிகாரத்துக்கு வந்த திரை நட்சத்திரங்களில் எம்ஜிஆருக்கு அடுத்ததாக முக்கியமானவர் ஜெயலலிதா, அவர் இல்லாத முதலாவது சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் அவரது அரசியலை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..

Update: 2021-02-13 10:21 GMT
தமிழக முதல்வராக அதிகாரத்துக்கு வந்த திரை நட்சத்திரங்களில் எம்ஜிஆருக்கு அடுத்ததாக  முக்கியமானவர் ஜெயலலிதா, அவர் இல்லாத முதலாவது சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் அவரது அரசியலை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..

எம்ஜிஆருடன் படங்களில் நாயகியாக நடித்தபோதே, அவரது திராவிட இயக்க கொள்கை படங்களில் நடித்தவர் ஜெயலலிதா. அதனால், திராவிட இயக்க தலைவர்களிடம் அறிமுகமாகி இருந்தார்.1982ம் ஆண்டில் அதிமுக மூலமாக அரசியலில் அடியெடுத்து வைத்த ஜெயலலிதா, அடுத்த ஆண்டே கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆனார். 1984ம் ஆண்டு ​சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்காக தீவிர பிரசாரம் செய்தார். இதனாலேயே, அவருக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை  உறுப்பினராக எம்பி பதவியை வழங்கினார், எம்ஜிஆர். எம்ஜிஆரின் மறைவுக்கு பின், அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது, அதில் ஒரு அணிக்கு தலைமை ஏற்றார்,  ஜெயலலிதா. அவரது தலைமையிலான அதிமுக அணி, 1989ம் ஆண்டு பேரவை தேர்தலை எதிர் கொண்டது. அந்த அணியின் சின்னம் சேவல். அந்த தேர்தல் தான், ஜெயலலிதா களமிறங்கிய முதல் சட்டப்பேரவை தேர்தல், போடி நாயக்கனூர் தொகுதியில் அவர் போட்டியிட்டார். 1957ல் அண்ணா, முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டதும் சேவல் சின்னத்தில் தான்.1989ம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதா தலைமையிலான அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. முதன் முறையாக சட்டப் பேரவைக்குள் நுழையும்போதே எதிர்க்கட்சி தலைவராகவே காலடி வைத்தார், ஜெயலலிதா. தமிழகத்தின் முதலாவது பெண் எதிர்க்கட்சி தலைவர் அவர் தான்.அதன்பிறகு, அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்து, இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்தபின், கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். இதையடுத்து,  1989ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, நாகை தொகுதியை தவிர தமிழகத்தின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி காண்பித்தார், ஜெயலலிதா. இதே கூட்டணியும் வெற்றியும் 1991 சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலிக்க...முதன் முறையாக தமிழக முதல்வரானார் ஜெயலலிதா. அப்போது, அவரது வயது 43 மட்டுமே. தமிழகத்தின் மிக இளம் வயது முதல்வர், இரண்டாவது பெண் முதல்வர், முதல்வர் பதவியில் அமர்ந்த இரண்டாவது நடிகை என்பது போன்ற பெருமைகளும் சேர்ந்தன.

ஜெ,, ஜெயலலிதா எனும் நான்...

ஆனால், ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சி கடும் விமர்சனத்துக்கு ஆளாக, அடுத்து வந்த, 1996ம் ஆண்டு பேரவை தேர்தலில் வெறும் 4 இடங்களை மட்டுமே அதிமுக பிடித்தது. பர்கூர் சட்டப்பேரவை தொகுதியில் ஜெயலலிதாவே தோற்றுப் போனார்.தோல்வியின் கசப்பை ருசித்தபோதிலும், மனம் தளராமல், அடுத்தடுத்த வியூகங்களை அமைத்து காங்கிரஸ், தமாகா, கம்யூனிஸ்டுகள் போன்ற கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்து 2001ம் ஆண்டு பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதல்வரானார், ஜெயலலிதா.அதன்பிறகு, 2004 நாடாளுமன்ற தேர்தல், 2006ம் ஆண்டு பேரவை தேர்தல் என அடுத்தடுத்து தோல்வியடைந்தாலும், தனது அரசியல் போராட்டத்தை கைவிடாமல், 2011 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மறுபடியும் முதல்வரானார், ஜெயலலிதா.2014 நாடாளுமன்ற தேர்தல், 2016 பேரவை தேர்தல் ஆகியவற்றில்  கூட்டணி எதுவுமே இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை நிற்க வைத்து வெற்றி பெறச் செய்தார், ஜெயலலிதா. தமிழக தேர்தல் களத்துக்கு இது முற்றிலும் புதிது. இதுபோல, 2016ம் ஆண்டு பேரவை தேர்தலின்போது, 30 ஆண்டுகளுக்கு பின், ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய சாதனையையும் படைத்தார்.  2014ல் அமைந்த மக்களவையில் அதிமுகவுக்கு 37 எம்பிக்கள் இருந்தனர்.  மாநில கட்சி ஒன்று மக்களவையில் 37 இடங்களை பெற்றதும், அதுவே முதன் முறை. 

நீங்கள் செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா

அடுத்தடுத்த சாதனைகளை படைத்த ஜெயலலிதா, வழக்கு காரணமாக பதவியில் இருந்தபோ​போதே சிறைக்கு சென்ற முதலாவது முதலமைச்சர் என்ற சோகத்தையும் கூட, தனதாக்கிக் கொண்டார்.எம்ஜிஆர், ஜெயலலிதாவை போலவே அரசியல் களம் புகுந்த நட்சத்திரங்களை பற்றியும் அவர்களின் வெற்றி எப்படி இருந்தது என்பதை பற்றியும் அடுத்தடுத்த நாட்களில் பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்