ரஜினி எப்போது டிஸ்சார்ஜ்..?
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அரசியல் அறிவிப்பு, அண்ணாத்த படப்பிடிப்பு என பரபரப்பாக இருந்தார் நடிகர் ரஜினிகாந்த்... அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த நிலையில் படப்பிடிப்பு குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து நடிகர் ரஜினிக்கும் கொரோனா சோதனை மேற்கொண்ட நிலையில் அவருக்கு ரிசல்ட் நெகட்டிவ் என வந்ததால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் அடுத்த நாளே உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். உடல் சோர்வு, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இதனிடையே, ரஜினிகாந்தின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க சரியான அளவு மருந்துகள் தரப்பட்டு வருகின்றன. ரத்த அழுத்தம் சீரான பின்னரே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார், என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு மேலும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையானது விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் ரஜினிகாந்த் ஓய்வில் இருக்க அறிவுரை வழங்கி இருக்கும் மருத்துவர்கள், தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். ரஜினிகாந்தை பார்க்க மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் உடல் நிலையை பொறுத்தே டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதேநேரம் மற்றொரு தரப்போ நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், அவர் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது. உடல்நிலை தொடர்பாக மாஸ்டர் செக்கப் முடித்து விட்டு அவர் விரைவில் சென்னை திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரஜினியின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்போனில் கேட்டறிந்தார். ரஜினிகாந்த் நலம் பெற வேண்டி பிரார்த்திப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் ரஜினிகாந்திற்கு சென்னையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சிலர் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்று உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசியல் அறிவிப்பை இந்த மாத இறுதியில் வெளியிடுவார் என பரபரப்பாக பேசப்பட்ட ரஜினி, மருத்துவமனையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது....