உலகின் மிக நீளமான சுரங்க பாதை - நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான உள்கட்டமைப்பாகவும், உலகிலேயே கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ள சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லடாக்கின், லே வரை செல்லும் சாலை வருடத்தில் 6 மாதங்கள் பணியால் மூடப்படும் நிலை காலம் காலமாக உள்ளது.
இந்நிலையில், எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்கள் செல்லவும், பொது மக்களின் வழக்கமான பயன்பாடுகளுக்கு இந்த சாலையை பயன்படுத்துவது சிரமமாக இருந்து வந்தது.
இந்நிலையில், 1960 ஆம் ஆண்டு, ரோப் கார் அமைக்க அப்போதைய பிரதமர் நேரு திட்டமிட்டார்.
ஆனால் கடந்த 1983 -ல்அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இங்கு சுரங்கப் பாதை அமைக்க முடிவு செய்தார். அவரது மறைவை தொடர்ந்து திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
கார்கில் போரை தொடர்ந்து , இந்த திட்டத்திற்கு 2000 ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதம் ஆன நிலையில், சுரங்கம் துளையிடும் பணியை 2010ம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தொடங்கி வைத்தார்.
பின்னர் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, 2019-ல் இந்த திட்டத்தின் பெயரை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் மாற்றினார்.
அனைத்து பருவ நிலைகளுக்கு ஏற்றதாக அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதை, எல்லை பாதுகாப்பிற்காக, லடாக் பகுதிக்கு செல்வதற்கும், எளிதில் அணுக முடியாத லகுல் ஸ்பிட்டி பகுதிக்கு செல்லவும் வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இமாசல பிரதேச மாநிலத்தின் மணாலியில் இருந்து லடாக்கின், லே நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
9.2 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டு உள்ள இந்த சுரங்கம் உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு உள்ள மிக நீளமான சுரங்கம் ஆகும்.
10 ஆண்டுகள் கடும் உழைப்புக்கு பின்னர் இந்த சுரங்கப் பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதனால், மணாலியில் இருந்து லே செல்லும் பயண தூரம் 46 கி.மீ., குறையும்.
"அடல் சுரங்கப் பாதை" என பெயரிடப்பட்டு உள்ள இந்த சுரங்கப் பாதையில், ஒவ்வொரு 60 மீட்டர் இடைவெளியில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு, 500 மீட்டர் தூரத்திலும், அவசர கால வெளியேறும் வழி வைக்கப்பட்டுள்ளது-
நாளொன்றுக்கு 3 ஆயிரம் கார்கள், ஆயிரத்து 500 சரக்கு வாகனங்கள் செல்லும் வகையில், மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை இயக்கும் வகையில் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு உள்ளது.
மொத்தம் 15 ஆயிரம் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டு
மூவாயிரத்து 500 கோடி மதிப்பில் இந்த சுரங்க பாதை கட்டப்பட்டு உள்ளது.
60 ஆண்டுகள், 10 பிரதமர்களை கடந்து நிறைவேறியுள்ளது, இந்த வரலாற்று சிறப்பு மிக்க சுரங்கம் பாதை....