மகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்காக அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் அரங்கேறிய நிலையில், காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் கட்சிகளோடு, சிவசேனா தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்தது. இதை தொடர்ந்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டணிக்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டணி, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்ததையடுத்து, வியாழக்கிழமை மாலை மும்பை தாதர் பகுதியில் உள்ள சிவாஜி பூங்கா மைதானத்தில், மகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
காங்., தேசியவாத காங். தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்பு
முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிற்கு பிறகு, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெயந்த் ராஜாராம் பாட்டீல் மற்றும் சகன் சந்திரகாந்த் புஜ்பால், காங்கிரஸ் கட்சியின் பாலாசாஹேப் தோரட் மற்றும் நிதின் ராவத் ஆகிய 6 பேருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.