கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை திறப்பு...

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.

Update: 2018-12-16 16:08 GMT
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திமுக பொது செயலாளர் அன்பழகன், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றனர். பல்வேறு அரசியல் தலைவர்கள், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். செம்மொழி பாடலுடன் கருணாநிதி சிலை திறந்து வைக்கப்பட்டது.   

கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை 

சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பொதுக்கூட்ட மேடையில் அனைவருக்கும் வீரவாள் பரிசளிப்பு 

பின்னர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டனர். கருணாநிதி குறித்த சூரியன் மறைவதில்லை என்ற நூலை சோனியா காந்தி வெளியிட்டார். மேடையில் இருந்த அனைவருக்கும் வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது. 

3 முதலமைச்சர்கள் - கருணாநிதிக்கு புகழாரம் 

திமுக பொருளாளர் துரைமுருகன் வரவேற்புரையுடன் தொடங்கிய பொதுக்கூட்டத்தில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திபாபு நாயுடு ஆகியோர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினர்.  

"பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிகிறேன்" - திமுக தலைவர் ஸ்டாலின் 
நாட்டு மக்களை காப்பாற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தாங்கள் ஒன்று சேர்ந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்றும் அவரது கரத்தை வலுப்படுத்துவோம் என்றும் கூறினார்.

"தமிழகத்தின் உரிமைக்காக போராடியவர், கருணாநிதி" -  சோனியா காந்தி

தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தமிழில் வணக்கம் என்று கூறி தனது பேச்சை தொடங்கினார். தேர்தலில் தோல்வியே காணாதவர் என்று கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிய அவர், நன்றி என்று கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.

"அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும்"

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அடுத்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்