தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை - தலைமை தேர்தல் ஆணையர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை என தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
18 எம்.எல்.ஏக்கள் வழக்கில், 30 நாட்களுக்கு மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றால், 18 தொகுதிகளுக்கும் ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தந்தி டிவிக்கு தொலைபேசி வாயிலாக அவர், சில தகவல்களை அளித்துள்ளார். 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மூன்றாவது நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் இருப்பதாகவும், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றால், உடனடியாக இடைத்தேர்தல் பணிகள் துவங்கப்படும் என்றும் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.
தற்போது காலியாகவுள்ள திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளதால், அந்த இரு தொகுதிகளுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ராவத் தெரிவித்துள்ளார். மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள், இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராவத் கூறியுள்ளார்.