திமுக போராட்டம் நடத்த 102 இடங்களுக்கு அனுமதி அளிப்பதாக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல்
திமுக போராட்டம் நடத்த அனுமதி கோரியிருந்த இடங்களில் 102 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகத்தில் 127 இடங்களில் கண்டன பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், அனுமதி வழங்க முடியுமா என்பது குறித்து இன்று பிற்பகலில் தெரிவிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார். பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயார் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, 127 இடங்களில் 102 இடங்களுக்கு அனுமதி அளிப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள இடங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், மாற்று இடங்களை கொடுத்தால் பரிசீலிக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.