அதிமுக எம்.பி. குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது குவியும் வழக்குகள்
அதிமுக எம்.பி. குறித்து அவதூறாக பேசியதாக, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது மத்திய குற்றப் பிரிவில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆணையர் அலுவலகத்தில், கடந்த 19 ஆம் தேதி, கடலூர் தொகுதி அதிமுக எம்.பி., அருண்மொழி தேவன், தன்னை அவதூறாக பேசியதாக, ஹெச்.ராஜா, மீது புகார் அளித்திருந்தார். அதன்படி, கலகத்தை தூண்டும் வகையில் பேசியது, கலவரத்தை தூண்டியது, தவறான கருத்துக்களை பரப்பி விரோத உணர்வை ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, கரூர், தஞ்சாவூர் புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமாரி, திருவாரூர், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச்.ராஜா மீது திருமயம் காவல்நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.