சட்டத்தை உருவாக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏன் மருத்துவ சான்றை கட்டாயமாக்கக்கூடாது? உயர்நீதிமன்றம் நீதிபதி கருத்து

நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2018-06-27 01:52 GMT
நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மருத்துவ சான்றிதழை காட்டாயமாக்க கோரி தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி கிருபாகரன், சட்டத்தை உருவாக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏன் மருத்துவ சான்றை கட்டாயமாக்கக்கூடாது? என கேள்வி எழுப்பியதுடன், 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் அரசியல் ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமே என இருக்க கூடாது என்று கருத்து தெரிவித்தார்.

கலைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்த கருணாநிதி,  எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள் அளித்த வரவேற்பு, தற்போது வருபவர்களுக்கு இல்லை என்றும், நீதிபதி குறிப்பிட்டார். குண்டர்களுக்கும், நில அபகரிப்பாளர்களுக்கும், தேர்தலில் வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும்,  ஒரு லட்சம் வாக்காளர்களின் கையெழுத்திருந்தால்தான், அரசியல் கட்சியை பதிவு செய்ய வேண்டுமென தகுதி நிர்ணயிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் கொண்டுவந்த தேர்தல் சீர்திருத்தத்தை தேர்தல் ஆணையம் தொடர வேண்டும் எனவும் வலியுறுத்திய நீதிபதி கிருபாகரன், வழக்கின் விசாரணையை ஜூலை 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்