அன்னிய செலாவணி மோசடி வழக்கு: தினகரனுக்கு ஆவணங்களை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்களை தினகரனுக்கு வழங்க எழும்பூர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து வங்கியில் ஒரு கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்ததாக தினகரன் மீது 1996ம் ஆண்டில் அமலாக்க பிரிவு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை, எழும்பூர் பொருளாதார குற்றபிரிவு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், லண்டன் உள்ளிட்ட இடங்களில் உள்ள 17 பேரை குறுக்கு விசாரணை செய்யவும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பிய ஆவணங்களை வழங்க கோரியும் தினகரன் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தினகரன் தரப்பு கோரிய ஆவணங்களை வழங்குமாறு எழும்பூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.