"தீவிரமாகும் போர்" - தனது பாணியில் சொல்லி அடித்த பிரதமர் மோடி | PM Modi
மோதல்கள் நிறைந்த உலகம் யாருக்கும் பயன் அளிக்காது என்றும், ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற உணர்வில் உலகைப் பார்க்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லியில் ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் பொதுத்தேர்தல்கள் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படுவதாக தெரிவித்தார். 2024 பொதுத்தேர்தலின்போது, சுமார் 100 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருப்பதாகக் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ளாட்சி, சுயாட்சி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 32 லட்சம் பேர் உள்ளதாகவும், இவர்களில் 50 சதவீதம் பெண் பிரதிநிதிகள் என்றும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். மோதல்கள் நிறைந்த உலகம் யாருக்கும் பயனளிக்காது என தெரிவித்த பிரதமர், பிளவுபட்ட உலகம் நம் முன் உள்ள சவால்களுக்கு தீர்வைக் கொடுக்க முடியாது என்று குறிப்பிட்டார். இது அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான நேரம், ஒன்றாக நகர வேண்டிய நேரம், ஒன்றாக முன்னேற வேண்டிய நேரம் என தெரிவித்த பிரதமர், அனைவரின் வளர்ச்சி மற்றும் நலனுக்கான நேரம் இது என்றும் குறிப்பிட்டார்.