வங்கி கடன் பெற்று தருவதாக நூதன மோசடி - ஆவணங்களை பெற்று வேறு நபர் பெயரில் கடன்
புதுச்சேரியில் கடன் பெற்று நூதன முறையில் மோசடி செய்த வங்கி ஊழியர், போலி பத்திரிகையாளர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி, நெட்டப்பாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன் வட மங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பணத்தேவை ஏற்பட்டதால், மணிகண்டன் என்பவர், தனியார் வங்கியில் பணிபுரிவதாக பேசி வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். பின்னர், அதற்கான ஆவணங்களை, பெற்றுள்ளார். பின்னர், மணிகண்டன், தமது சொந்த பணத்தை அனுப்புவதாக கூறி, அதனை சரவணனின் நண்பர் ஐயப்பனுக்கு அனுப்புமாறு கூறியுள்ளார். வங்கி பரிவர்த்தனைக்காக இவ்வாறு செய்ய வேண்டும் என்றும், அப்போது தான் கடன் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படும் என கூறியுள்ளார். இதனை நம்பி தம்முடைய கணக்கில் வந்த பணத்தை அதே போல் நண்பர் ஐயப்பனுக்கு சரவணன் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து 3 மாதங்களுக்கு பிறகு வங்கியில் இருந்து சரவணனுக்கு வங்கி கடனை கட்ட கோரி நோட்டீஸ் வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரவணன், புதுச்சேரி நீநிமன்றத்தில் முறையிட்டதின் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்த காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் வழக்கு பதிவு செய்த பெரியகடை போலீசார் நூதன மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர் மணிகண்டன், அவரது நண்பர் ஐயப்பன், மற்றொரு நண்பர் சிவானந்தம் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் ஐயப்பன் என்பவர் போலி பத்திரிகையாளர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.