கொரோனாவால் பாதிக்கப்பட்ட 39 வயது நபர் - 130 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய ஆச்சரியம்
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 39 வயது இளைஞர் ஒருவர், 130 நாட்களுக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
மீரட்டின் ஈஸ்வர்பூரியில் வசிக்கும் விஸ்வாஸ் சைனி என்ற நபர், கடந்த மே மாதம் 2ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரின் ஆக்ஸிஜன் அளவு 16 ஆக குறைந்தது. மேலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. CT ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டபோது, இரண்டு நுரையீரல்களும் முற்றிலும் வெண்மையாக காணப்பட்டன. இந்நிலையில் அவரை காப்பாற்றுவது மிகவும் அசாத்தியமான காரியம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அவருக்கு கருப்பு பூஞ்சை, நிமோனியா ஆகிய நோய்களை எதிர்க்கும் மருந்துகளை கொடுத்தனர்.
அவர் உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என மருத்துவர்கள் எண்ணியும், ஒன்றரை மாதம் வென்டிலேடரில் இருந்த விஸ்வாஸ் சைனி கொரோனாவிலிருந்து மீண்டு வந்தார். 130 நாட்களுக்கு கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடிய பிறகு, விஸ்வாஸ் சைனி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், இது மருத்துவர்களையும் ஆச்சரியப்படுத்தியது.