புரட்டி போட்ட 'யாஸ்' புயல் -140 கி.மீ வேகத்தில் கரையை கடந்த புயல்
யாஸ் புயலால் ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் மட்டும் ஒரு கோடி மக்கள் பாதித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான யாஸ் புயல், சூறாவளி, பலத்த மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு என ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கோர முகத்தை காட்டிவிட்டது. குறிப்பாக 2 மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. ஒடிசாவின் பாத்ரக் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும், சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்ஒடிசா - மேற்கு வங்க எல்லையான உதய்ப்பூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேற்கு வங்கத்தில் திகா நகரில் புயல் கரையை கடக்கும் போது ஏற்பட்ட கடல் சீற்றத்தால், கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. பல்வேறு இடங்களில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மிட்னாப்பூர் பகுதியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அடுக்குமாடி குடியிருப்புக்குள் நீர் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டு முகாம்களுக்கு அழைத்து சென்றனர்மேற்குவங்கத்தில் மட்டும் புயலால் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். திகா நகரில் தனது வாழ்நாளில் இதுவரை சந்திக்காத அளவு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ள மம்தா, தாழ்வான பகுதிகளில் வசித்த 15 லட்சம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.கொரோனா என்ற கோர பிடியில் தேசம், சிக்கி தவிக்கும் நிலையில், இயற்கையும் தன் பங்கிற்கு, சேதத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறது.