ஹோட்டலில் மெனு கார்டு கொடுக்காததால் ஆத்திரம் - நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்
ஹைதராபாத்தில் ஹோட்டலில் மெனு கார்டு கிடைக்காத ஆத்திரத்தில் இளைஞர்கள் சிலர் ஹோட்டலை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ராம் நகரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார் சதாசிவ ரெட்டி. சம்பவத்தன்று இவரது ஹோட்டலுக்கு முஷிராபாத்தை சேர்ந்த சுமன் என்ற இளைஞரும் அவரது நண்பர்கள் 2 பேரும் வந்துள்ளனர்.
ஹோட்டலுக்கு வந்தவர்கள் என்ன உணவு வகைகள் இருக்கிறது? என்பதை பார்க்க மெனு கார்டை கேட்டுள்ளனர். ஆனால் ஹோட்டல் பணியாளர் தீபக், கொரோனா பரவல் காரணமாக மெனு கார்டு வழங்கப்படுவதில்லை என கூறியிருக்கிறார்.
இந்த பதிலால் ஆத்திரமடைந்த அவர்கள் மீண்டும் மெனு கார்டு கொடுங்கள் என அடம் பிடிக்கவே, பேச்சு முற்றி வாக்குவாதமாக மாறியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுமன் தலைமையிலான கும்பல், நாற்காலிகளை எல்லாம் வீசி எறிந்ததோடு ஹோட்டல் மேலாளரையும் மிரட்டிச் சென்றது.
பின்னர் மீண்டும் இரவு 10 பேர் கொண்ட கும்பலுடன் ஹோட்டலுக்கு வந்த சுமன், ஹோட்டல் உரிமையாளரின் மகன் பர்வேஷ் ரெட்டி, பணியாளர் தீபக் ஆகியோரை சரமாரியாக தாக்கியது.
பின்னர் ஹோட்டலில் இருந்த டி.வி.க்கள், ப்ரிட்ஜ், சிசிடிவி கேமரா என ஒன்று விடாமல் எல்லாவற்றையும் அடித்து துவம்சம் செய்தனர். ஹோட்டலில் இருந்த பொருட்களுக்கும் அந்த கும்பல் தீ வைத்ததால் அந்த பகுதியே பரபரப்பான ஒரு இடமாக மாறியது.
இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுமன் தலைமையிலான கும்பலை தேடி வருகின்றனர்.