"புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்"- இறுதியாண்டு மாணவர்களுக்கு புதுவை பல்கலைக்கழகம் அனுமதி
புதுச்சேரி கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா காரணமாக கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய இறுதியாண்டு தேர்வுகள் , தற்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என மாணவர்கள் அவரவர் விருப்பப்படி எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரையின்படி , இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு அறைகளில் புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் பிற ஆய்வு பொருட்களை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லாசர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கேள்விக்கான பதில்களை மாணவர்கள் புரிந்து கொண்டு பதிலளிக்க இந்த முறை வழிவகை செய்யும் என்றும் மாணவர்கள் தங்கள் புத்தகங்களை பரிமாறாமல் இருப்பதை தலைமை கண்காணிப்பாளர் உறுதி செய்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் ஏ4 வெள்ளைத்தாளில் கருப்பு மை கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்றும் தேர்வு எழுதிய அனைத்து பக்கங்களையும் தேர்வு முடிந்த 30 நிமிடத்திற்குள் ஸ்கேன் செய்து அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.