முல்லை பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு -முன்னேற்பாடுகள், மராமத்து பணிகளை பார்வையிட்டனர்
கேரளாவில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பெரியாறு அணையில் செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து துணைக் கண்காணிப்பு குழுவினர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.
பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை நியமித்தது. இக்குழுவிற்கு உதவியாக 5 பேர் கொண்ட துணைக்குழுவையும் அமைத்துள்ளது. இதன் தலைவராக கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். தமிழக பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரளா சார்பில் அம்மாநில நீர்ப்பாசனத்துறை செயற் பொறியாளர் பினுபேபி, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர். கடந்த ஜனவரி 22-ல் அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக இருந்தபோது துணைக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்நிலையில், அணையில் செய்துள்ள முன்னேற்பாடுகள் மற்றும் மராமத்து பணிகள் குறித்து துணைக் கண்காணிப்பு குழுவினர், பிரதான அணை, பேபி அணை, கேலரிப் பகுதி, மதகு பகுதி மற்றும் அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், கசிவுநீர் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் அ ணையின் மதகுகளை இயக்கி பார்த்தனர்.