ஜம்மு, காஷ்மீர் விவகாரம் - 250 பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்
ஜம்மு, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 250 பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். சிறப்பு சட்டப்பிரிவு மற்றும் அந்தஸ்து பற்றி அம்மாநில மக்கள் முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
ஜம்மு, காஷ்மீர் மாநில மக்களின் இசைவை பெறாமலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்காமலும், அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகை ரத்து செய்யப்பட்டதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர். ஜம்மு, காஷ்மீரில் இயல்பு நிலையை திரும்பக் கொண்டு வரவும், தொலைபேசி மற்றும் இணையதள வசதியை திரும்ப வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அடிப்படை உரிமைகளில் ஒன்று இணையதள சேவை என அண்மையில் சென்னை மற்றும் கேரள உயர்நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பையும் அவர்கள் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளனர். வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளதாகவும், அரசியல் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டு உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கையால் பல்லாயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் நிலவும் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர, அங்கு பேரவை தேர்தலை உடனே நடத்த வேண்டும் என அவர்கள் பிரமருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 370 சட்டப் பிரிவு மற்றும் மாநில அந்தஸ்து தொடர்பாக , அம்மாநில மக்கள் முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும் எனவும் பிரதமருக்கு 250 பேரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.